சென்னை: பள்ளிகள், மாணவர்கள் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் மாணவ, மாணவியருக்கு உடல் ரீதியான தண்டனைகள் அளிக்கப்படுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் குழு அமைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகள், மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகள் மற்றும் குடும்பங்கள் ஆகியவற்றில் மாணவ, மாணவியருக்கு உடல் ரீதியான துன்புறுத்தல்கள், தண்டனைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பாதிப்புகள் தடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
அதன் காரணமாக மாணவர்கள் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அந்தவகை பாதிப்புகளில் இருந்து தடுக்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு மனநலம் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதற்கான கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சுறுத்தல் குறித்து தெரிய வந்தாலும் அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் மனநலன் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் அமைக்கப்படும் குழுவின் தலைவராக பள்ளித் தலைமை ஆசிரியர் போன்றோர் இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற்று இந்த வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவும், அதுகுறித்து முறையாக தெரிவிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய 8 பக்க விவரங்களும் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
The post பள்ளிகள், விடுதிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியாக துன்புறுத்தல்களை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவு appeared first on Dinakaran.