சென்னை: சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 200 பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி வழிக் கல்வி கற்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு நேற்றுடன் பணி நாட்கள் முடிந்து இன்று முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த கல்வி ஆண்டான ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் போது, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் வசதிக்காக இணைய வசதியுடன் கூடிய கணினி வழிக் கல்வி கற்க ஏற்பாடு செய்யவும், அதற்காக மாதம் ரூ.1500 செலவிடவும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் கணினி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்கப் பள்ளிகளிலும், 7904 நடுநிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த இணையதள வசதி வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது.
முன்னதாக தமிழ்நாட்டில் 8 ஆயிரம் பள்ளிகளில் இணையதள வசதிகளை பெற்றுள்ள நிலையில், சில பள்ளிகள் இன்னும் அந்த வசதிகளை பெறவில்லை என்பதால் மே மாதத்துக்குள் அந்த பள்ளிகளில் இணையதள வசதிகளை பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பல பள்ளிகளில் கணினிகள் பொருத்தப்பட்டும் இணைய வசதிகள் இல்லை. அதனால் ஆசிரியர்களால் பாடப்பொருளை மாணவர்களுக்கு விவரிக்க முடியாது. அத்துடன் நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இதையடுத்து, வரும் மே மாதத்துக்குள் மேற்கண்ட விடுபட்ட பள்ளிகளில் இணைய தள வசதிகளை பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில் இயங்கும் 200 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது இணைய தள வசதியுடன் கூடிய கல்வி கற்கும் வசதிகள் வர உள்ளன.
The post சென்னையில் இணையவசதியுடன் 200 அரசுப்பள்ளிகளில் கணினி வழிக்கல்வி: பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்பாடு appeared first on Dinakaran.