×

புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.38 ஆயிரம் கோடி தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில், வெறும் ரூ.276 கோடியை மட்டும் ஒன்றிய பாஜ அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால் தேர்தல் நடக்கும் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3454 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.

இதை தொடர்ந்து டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப்பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணமாக அறிவித்து உடனடியாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒன்றிய குழுவும் நேரில் வந்து பார்வையிட்டு அறிக்கை கொடுத்து இருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து, கேலோ இந்தியா போட்டி தொடக்க விழா அழைப்பிதழ் கொடுக்க டெல்லி சென்ற தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கிவிட்டு, தமிழ்நாடு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும் என அவரது தரப்பில் இருந்தும் அரசு சார்பாக மீண்டும் வலியுறுத்தி இருந்தார். மேலும் தமிழ்நாடு அனைத்து கட்சி குழுவும் கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தி இருந்தது.

இதையடுத்து மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட பாதிப்புகளுக்கு என்று மொத்தம் ரூ.37,907 கோடி வழங்க வேண்டும் என்றும், அதில் முதற்கட்டமாக இடைக்கால அவசர நிவாரண நிதியாக ரூ.2000 கோடியை விரைந்து உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சூட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.285 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ.115 கோடியே 49 லட்சத்தை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

இதேபோன்று வெள்ள பாதிப்பிற்கு ரூ.397 கோடி ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், ரூ.160 கோடியே 61 லட்சம் விடுவித்துள்ளது. இதன் மூலம் மிக்ஜாம் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ரூ.276 கோடியே 10 லட்சத்தை விடுத்துள்ளது. ஆனால், இதே நேரத்தில் கர்நாடகாவுக்கு வறட்சி கால நிதியாக ரூ.3,454 கோடி தொகையை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில் வெள்ள பாதிப்பு மற்றும் புயல் பாதிப்பு விவகாரத்தில் மொத்தம் ரூ.37,907 கோடி கேட்டு, அதில் அவசர நிதியாக ரூ.2000 கோடி கேட்டு இருந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தற்போது மிகவும் குறைந்த அளவிலான நிதியை பாரபட்சத்தோடு ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த ஓரவஞ்சனைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநில பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பாஜ அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜ அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.160.61 கோடியும் ஆக மொத்தம் ரூ.276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.682.63 கோடி. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூ.406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூ.276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. நாம் கேட்ட நிவாரண நிதி ரூ.38,000 கோடி. ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூ.276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

இது ஒன்றிய பாஜ அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பாஜ அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும். தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பாஜ அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். இதுபோல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றிய பாஜ அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post புயல், வெள்ள நிவாரணத்துக்கு கேட்டதோ ரூ.38,000 கோடி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியதோ ரூ.276 கோடி: தேர்தல் நடக்கும் கர்நாடகத்துக்கு ரூ.3454 கோடி ஒதுக்கீடு; ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை என முதல்வர், கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,chief minister ,union government ,Chennai ,Tamil Nadu government ,Migjam storm ,Union BJP government ,
× RELATED பழக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது