சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.
தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.
நேற்று மட்டும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக திருப்பத்தூரில் 106.88, சேலத்தில் 106.7 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தி மற்றும் தருமபுரியில் 105.8, திருத்தணியில் 104.72, வேலூரில் 104.54, திருச்சியில் 104.18, நாமக்கல்லில் 104, மதுரை விமான நிலையம் மற்றும் கோவையில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் கொளுத்தியிருக்கிறது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உள் தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதுவே வட உள் தமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்சமாக 107 டிகிரி ஃபாரான்ஹீட் வரை வெப்பம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்த அளவில் அடுத்த 24 மணி நேரத்தில் 96.8-98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதாலும், அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாலும் தமிழகத்தில் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “வெப்ப அலை எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் ‘Rehydration Points’ அமைக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தைப் பொறுத்து தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழ்நாட்டின் 46 சுகாதார மாவட்டங்களிலும் 1000 மையங்களை ஏற்படுத்தி பொது மக்களுக்கு தேவையான ORS பாக்கெட்டுகளை வழங்க, மாவட்ட சுகாதார அதிகாரி உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் சுகாதாரமான தூய்மையான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 75 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த 1000 மையங்களும் ஜுன் மாதம் 30ம் தேதி வரை செயல்படும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 1000 இடங்களில் ORS பாக்கெட்களை விநியோகிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.