×
Saravana Stores

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது

லக்னோ: அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதை இன்று மாலை நடக்க உள்ள காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அறிவிக்கிறது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகள் அமேதி, ரேபரேலி. அமேதியில் கடந்த 1967ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது. 1980ம் ஆண்டில் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்ப தொகுதியாக மாறியது. அதே ஆண்டில் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். ராஜீவ்காந்தி மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார்.

பிறகு 1998ல் பாஜவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது. அமேதி தொகுதியில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிட்டு வென்றதால் மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004ல் முதன்முறையாக களம் இறங்கினார். 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் அமேதியில் தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த ஒன்றிய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019ல் ராகுலை தோற்கடித்தார். கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனால் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் மாநிலங்களவை உறுப்பினராகி விட்டார். இந்நிலையில் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் களம் காண்பாரா என்றும் ரேபரேலி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் தான் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 317 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த கூட்டம், உ.பி.,யின் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் வேட்பாளர்களை இறுதி செய்ய நடைபெறுகிறது. இதில், அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிடலாம் என்றே பரவலாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது அவரது தேர்தல் அரசியல் கணக்கை துவக்குவதாக அமையும். இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

The post பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Amethi ,Raberelli ,Congressional Federal Election Committee ,Lucknow ,Congressional Central Election Committee ,Rafarelli ,Gandhi ,Uttar Pradesh ,Repareli ,Ameti ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் பிரியங்கா...