*மே 31ம் தேதி வரை அமல்
ஊட்டி : கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மே மாதம் 1ம் தேதி முதல் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை மிகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை உட்பட அனைத்து பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆண்டுதோறும் கோடை சீசனின் போது போக்குவரத்தில் மாற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில் இந்த போக்குவரத்து மாற்றம் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், வார விடுமுறை நாளான இன்றும், நாளையும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இன்றும் நாளையும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கூடலூரிலிருந்து ஊட்டிக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் எச்பிஎப் கோல்ப் லிங்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும். அந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன்படுத்தி ஊட்டி நகருக்குள் வரலாம்.அதேபோல் மசினகுடியிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் தலைகுந்தா, கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டிபன் சர்ச் வந்தடையும்.
அங்கிருந்து தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்திலிருந்து, வண்டிசோலை வழியாக தாவரவியல் பூங்கா செல்லலாம். கூடலூரிலிருந்து ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பிங்கர் போஸ்டிலிருந்து காந்தல் சென்று, முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.
குன்னூரிலிருந்து ஊட்டி வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் மற்றும் மேக்சிகேப் வாகனங்களும் ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன் படுத்தி ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்குள் செல்லலாம். கோத்தகிரியிலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டி வர வேண்டும். அத்தியாவசிய வாகங்கள் தவிர (பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு) அனைத்து கனரக வாகனங்களும் 27ம் தேதி இன்று மற்றும் நாளை 28ம் தேதி மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் அனுமதி இல்லை.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக 27.04.2024, 28.04.2024 மற்றும் கோடை விழாவான 01.05.2024 முதல் 31.05.2024 வரை அனுமதிக்கப்படும். ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருந்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களது நான்கு சக்கர வாகனத்தை அவர்களது கடை எதிரே நிறுத்தக் கூடாது. அதற்கு பதிலாக இரு சக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள நீலகிரி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
The post கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இன்று முதல் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.