*விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ராயக்கோட்டை : ராயக்கோட்டையில் 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தர்மபுரி – ஓசூர், தேன்கனிக்கோட்டை- கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை- சூளகிரி செல்லும் சாலைகளின் மத்தியில் ராயக்கோட்டை நகரம் அமைந்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வாகனங்களால் ராயக்கோட்டை நகரில் பேக்குவரத்து நெரிசல், அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக காலை, மாலை பீக் ஹவர்ஸ் நேரத்தில் நகரில் கடுமையான வாகன போக்குவரத்து ஏற்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஓசூரில் இருந்து 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் மந்த கதியில் சாலை அமைப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி, சேலம் செல்லும் வாகனங்கள் ராயக்கோட்டை வழியாக சென்றால் விரைவாக செல்வதுடன், எரிபொருள் மிச்சமாவதாலும், டோல்கேட் இல்லாததாலும் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, ராயக்கோட்டை நகர் வழியாக வந்து செல்கின்றனர்.
நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவே, ராயக்கோட்டை ஊருக்குள் வராமல் செல்லும் சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் சாலைப்பணிகள் முடியாத தால் தான், நகரில் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. தேன்கனிக்கோட்டை- கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி செல்லும் வாகனங்கள், இந்த சாலையில் செல்ல வேண்டி இருப்பதால், சாலையை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி செண்டர் மீடியன் வைத்தாலே, நகரில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். மேலும் இப்பகுதியில் நிறைய கல் குவாரிகள் இருப்பதால், எம். சாண்ட், கற்கள் ஏற்றி வரும் லாரிகள் அதிகமாக செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
தவிர தனியார் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் பஸ்களும், பீக்ஹவர்ஸ் நேரத்தில் படையெடுப்பதால் சாலைகள் ஸ்தம்பித்து விடுகிறது. 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்தால், நிரந்தர தீர்வுகாண முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.