×

‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு

திருவண்ணாமலை : மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த ‘என் கல்லூரி கனவு’ என்ற உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் நேற்று நடந்தது.

முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மு.கணபதி, மண்டல ஒருங்கிணைப்பாளர் எல்.ரவி, தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சாந்தி வரவேற்றார். அப்போது, கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
கல்வி என்பது மதிப்பெண்களை பெறுவது மட்டுமல்ல. உயர்கல்வி வாய்ப்புகளை அடைவதன் மூலம்தான், பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்ணும் எழுத்தும் அறிந்தது தமிழ் சமூகம். சங்க காலத்தில் பெண் புலவர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருந்தனர்.

கல்வியே ஒருவருக்கு சிறந்த செல்வம். வாழ்க்கை வேறு, கல்வி என்பது வேறு. கல்வி என்பது சிந்திப்பது, கற்றுத்தருவதாகும். நமது எண்ணத்தை பொருத்தே நமக்கு மதிப்பு கிடைக்கும். எந்த தொழில் செய்தாலும் அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே கல்வி என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். கடினமான சூழ்நிலைகளில்தான் நமது திறமைகள் முழுமையாக வெளிப்படும். நெருக்கடிகளை கையாள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தால், கவலைப்பட வேண்டாம். நம் முயற்சிதான் தோல்வி அடைந்திருக்கிறது. நாம் தோற்கவில்லை. எனவே, மீண்டும் முயற்சித்து வெற்றியை பெறலாம். தற்கொலை எண்ணங்களை கைவிட வேண்டும்.

உங்களுக்காக தியாகம் செய்யும் பெற்றோரை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது. வாழ்நாள் முழுவதும் பெற்றோரை கண்ணீர் சிந்தும் நிலையை உருவாக்கக் கூடாது. எப்போது வேண்டுமானாலும் வாழ்வில் மாற்றங்கள் நிகழும். வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை, உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
கடினமான முயற்சிகள் மூலம் தான், சாதனைகள் புரிய முடியும். வெற்றிபெற திட்டமிடுதல் முக்கியம். கடினமான சூழ்நிலைகளை வலிமையாக எதிர்கொள்ள வேண்டும். சோதனைகள் வரும், அதை கடந்து செல்லுங்கள். உலகம் நிறைய வாய்ப்புகளை வைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி, எஸ்எம்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.அண்ணாமலை, பொறியாளர் கே.பாரதிதாசன் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம், ஜவ்வாதுமலை பகுதிகளை சேர்ந்த 1,200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அரசு மாணவர் விடுதி காப்பாளர் பி.தமிழ்வாணன் நன்றி கூறினார்.

 

The post ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Collector ,Bhaskara Pandian ,Thiruvannamalai ,My College Dream ,Tiruvannamalai ,Tiruvannamalai Collector ,Adi Dravida ,
× RELATED பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15...