×
Saravana Stores

திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்: சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு

திருச்சி. ஏப். 27: தமிழக சிறைத்துறை சார்பில் சிறைவாசிகள் உடல் அளவிலும், மனதளவிலும் அதிகளவில் சோர்வு அடைந்திடாதபடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் அவர்கள் குற்ற நடவடிக்கைகளை தொடராத அளவிற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அவர்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில்.. தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தன்னுடைய பங்களிப்பாக சிறைவாசிகளுக்கான தொழில்களை மேம்படுத்திடவும், அவர்களும் இந்த சமுதாயத்தில் சாதாரண மனிதர்களை போல வாழவும் வழிவகை ஏற்படுத்திடும்படி பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்க்குகளை சிறைவாசிகளுக்காக ஆரம்பித்துள்ளனர். அதில் ஏற்கனவே திருச்சி பெண்கள் மத்திய சிறையில் ஒரு பெட்ரோல் பங்க் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திருச்சி ஆண்கள் மத்திய சிறை வளாகம் அருகே புதிய பெட்ரோல் பங்க் தொடங்குவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திருச்சி மேலாளர் கென்னடி கூறுகையில்… சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறை வளாக நுழைவாயில் அருகே உள்ள 2800 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தில் பெட்ரோல் பங்க் கட்டுமானங்களுக்கு சுமார் 300 சதுரஅடி பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 1.9 கோடி நிதி ஒருக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 20 ஆயிரம் லிட்டர் டீசல் கொள்ளளவு உள்ள டேங்க்குகள் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த இடத்தில் எதிர்காலத்தில் சிஎன்ஜி கேஸ் மையம் அமைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. கட்டுமானங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வருட இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவுற்று அடுத்த ஆண்டு இந்த பெட்ரோல் பங்க் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும் இதில் சிறைவாசிகள் எப்படி பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறித்து நாம் சிறை அதிகாரிகளிடம் விசாரித்ததில் சிறைவாசிகள் 3 வேளை பணி சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் திருச்சி மண்டல சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, திருச்சி சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், பெண்கள் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி, இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் கென்னடி உள்ளிட்ட சிறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09 கோடி செலவில் பெட்ரோல் பங்க்: சிறைக்கைதிகள் நடத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Petrol ,station ,Trichy Central Jail ,Trichy ,Tamil Nadu Prisons Department ,Petrol station ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே...