×

ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு 2 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை, ஏப்.27: ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை 2 மாதங்களில் தயாரிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடத்தில் 116.1 கி.மீ தூரத்திற்கு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் ₹63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5வது வழித்தடத்தை ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி கூறியதாவது: 5வது வழித்தடத்தை கோயம்பேடு, திருமங்கலம் வழியாக ஆவடி வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 6 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. முதல் கட்டமாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி.அசோசியேட்ஸ் நிறுவனம், ஏகாம்இந்தியா பிரைவேட் லிமிடெட், பார்சில் பிரைவேட் லிமிடெட், ரைட்ஸ் லிமிடெட், சிஸ்ட்ரா லிமிடெட், அர்பன்மாஸ் டிரான்சிட் ஆகிய 6 ஆலோசனை நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்த நிறுவனங்களில் தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் வழங்க இரண்டு மாதங்கள் ஆகும். அதனை தொடர்ந்து 6 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு 2 மாதங்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Chennai ,Metro Administration ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...