மதுரை: அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் ேகாரிய வழக்கில், நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மணல் தமிழக அரசு சார்பாக கிடங்குகள் அமைத்து, இணையதளத்தில் பதிவு செய்த பின்னரே விற்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனர். ஆனால் தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு அளவுக்கு அதிகமாக விலையை நிர்ணயித்து மணல் விற்கப்படுகிறது. பொதுமக்களின் பெயரில் இணையதளத்தில் பதிவு செய்து, அரசு அதிகாரிகளே போலியான வாகன எண்ணை பயன்படுத்தி மணலை மறைமுகமாக அதிக விலைக்கு விற்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அரசாணையில் உள்ள விதிகளை பின்பற்றாமல் அதிகாரிகளே ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக ஆற்று மணலை விற்க அரசு நடவடிக்கை எடுத்து, அரசாணைப்படி விதிகளை பின்பற்றி குவாரி மற்றும் மணலை விற்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர், அரசாணையில் உள்ள விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
The post அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.