×

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்; நிர்மலாதேவி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்தவர் நிர்மலாதேவி. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2018, ஏப்ரல் 16ம் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முருகனுக்கும், கருப்பசாமிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அதேபோல் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகி வந்தார். பின்பு சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலங்கள் கோர்ட்டில் தரப்பட்டன. கல்லூரி நிர்வாகத்திடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த வழக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பகவதி அம்மாள் முன் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். தீர்ப்பையொட்டி நேற்று காலை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக கருப்பசாமி, முருகன் நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆனால் நிர்மலாதேவி நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதனைத்தொடர்ந்து நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நாளை மறுதினம் (ஏப். 29) ஆஜராக வேண்டும் என நீதிபதி பகவதி அம்மாள் உத்தரவிட்டு, தீர்ப்பை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

The post மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம்; நிர்மலாதேவி வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nirmala Devi ,Srivilliputhur ,Nirmaladevi ,Aruppukkottai, Virudhunagar district ,Nirmala ,Devi ,Dinakaran ,
× RELATED அதிமுக நிர்வாகி அடித்து கொலை