திருச்செந்தூர்: பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் திருவிழா காலங்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் குவிந்து வருவது வழக்கமாகி விட்டது. அதேபோல தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக திருச்செந்தூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மற்றும் சனி, ஞாயிறுக்கிழமையில் இங்கு தங்குவதற்காக விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் திருச்செந்தூரில் தங்குவதற்கு இடம் கேட்டு பக்தர்கள் விடுதிகளில் அறைகள் கேட்ட வண்ணம் உள்ளனர்.
கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதாகுமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.