நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடந்தது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65.54 சதவிகித வாக்குகள் பதிவாகின. அடுத்ததாக 2ம் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்தார். இத்தொகுதிக்கான தேர்தல் 3ம் கட்டத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
அதாவது கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடக்கிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 15.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 8.08 கோடி, பெண்கள் 7.8 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 5,929 பேர். முதல் முறை வாக்காளர்கள் 34.8 லட்சம் பேர். 20 முதல் 29 வயது வரையுள்ள வாக்காளர்கள் 3.28 கோடி பேர்.
களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்கள் 1,202 பேர். பெண் வேட்பாளர்கள் 102 பேர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 4553 பறக்கும் படைகள், 5731 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 1462 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வாக்களித்தனர். மேற்கு வங்கத்தில் வாக்களிக்க காலை முதலே வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்துக்கு முன்னதாக வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர். இங்கு நடிகரும் பாஜ வேட்பாளருமான நடிகர் சுரேஷ் கோபி, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். எர்ணாகுளம் தொகுதியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் வாக்களித்தார். எர்ணாகுளம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு, வடகராவில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில நிமிடங்களில் சரி செய்யப்பட்டு சற்று தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. கண்ணூரில் முதல்வர் பினராயி விஜயன் குடும்பத்துடன் வாக்களித்தார். மணிப்பூர் அவுட்டர் தொகுதியில் காலையிலேயே 94 வயது முதியவர் வாக்களிக்க வந்தார்.
கர்நாடகா பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, வாக்குப்பதிவு நாளில் வீட்டில் பூஜை செய்து வழிபட்டார். பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சவுமியா ரெட்டி களத்தில் நிற்கிறார். பெங்களூரு வாக்குச் சாவடியில் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே வாக்களித்தார். இந்நிலையில், நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! appeared first on Dinakaran.