×
Saravana Stores

ரேபரேலியில் பிரியங்காவை எதிர்த்து போட்டியிட முடியாது: வருண்காந்தி அதிரடி

லக்னோ: பிரியங்கா காந்தியை எதிர்த்து ரேபரேலியில் போட்டியிட முடியாது என பாஜ மேலிடத்திடம் அக்கட்சியின் எம்பியும் ராகுல் காந்தியின் சித்தப்பா மகனுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார். இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ல் கடைசி கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு மே 20ம் தேதி (5ம் கட்ட தேர்தல்) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரேபரேலியில் கடந்த முறை சோனியா காந்தி வென்ற நிலையில் தற்போது ராஜ்யசபா எம்பியாகி விட்டார். இதனால் ரேபரேலியில் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. அதேபோல் கடந்த முறை அமேதியில் தோற்ற ராகுல் காந்தி மீண்டும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் ரேபரேலி, அமேதி தொகுதிக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. பாஜவை பொறுத்தவரை அமேதியில் கடந்த முறை வென்ற ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரேபரேலிக்கு இன்னும் பாஜ வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில்தான் பிரியங்கா காந்திக்கு எதிராக அவரது சித்தப்பா மகனும், தம்பியுமான வருண் காந்தியை (சஞ்சய் காந்தி – மேனகா காந்தி தம்பதியின் மகன்) களமிறக்க பாஜ திட்டமிட்டது. வருண் காந்தி தற்போது உத்தர பிரதேச மாநில பிலிபட் தொகுதியின் பாஜ எம்பியாக உள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட வருண் காந்திக்கு பாஜ மீண்டும் சீட் கொடுக்காத நிலையில் அவரை பிரியங்கா காந்திக்கு எதிராக ரேபரேலியில் வேட்பாளராக்க பாஜ தயாராகி வருகிறது.

இந்நிலையில் தான் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியை எதிர்த்து களமிறங்கும்படி வருண் காந்திக்கு பாஜ வாய்ப்பு வழங்கி உள்ளது. அதை வருண் காந்தி நிராகரித்துள்ளார். அதாவது ரேபரேலியில் தன்னால் போட்டியிட முடியாது என பாஜ மேலிடத்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேரு குடும்பத்தின் மருமகளான சோனியா காந்திக்கும், மேனகா காந்திக்கும் இடையே பிரச்னை இருந்தாலும் கூட சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருடன் மேனகா காந்தியின் மகன் வருண் காந்திக்கு நல்ல உறவு உள்ளது. பொதுவெளியில் அவர்கள் வெளிப்படையாக சந்திக்காவிட்டாலும் கூட சகோதர, சகோதரி பாசத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.

 

The post ரேபரேலியில் பிரியங்காவை எதிர்த்து போட்டியிட முடியாது: வருண்காந்தி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Varun Gandhi ,Lucknow ,Rahul Gandhi ,BJP ,Rae Bareli ,Priyanka Gandhi ,Lok Sabha ,Uttar Pradesh ,Rae ,Dinakaran ,
× RELATED அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே: நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!