×

தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்; வனபத்ரகாளியம்மன் கோயில் பூசாரிகள் 4 பேர் அதிரடி கைது

மேட்டுப்பாளையம்: தட்டு காணிக்கை கையாடல் செய்த விவகாரத்தில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் பூசாரிகள் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு புகார் அளித்தார். அதில், வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளனர். அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். எனவே 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் 4 பேரும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கோயில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்; வனபத்ரகாளியம்மன் கோயில் பூசாரிகள் 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Vanabhadrakaliyamman temple ,Mettupalayam ,Vanabhatrakaliamman temple ,Bhavani River ,Thekambatti ,Mettupalayam, Coimbatore ,
× RELATED முறைகேடாக குடிநீர் இணைப்பு...