சென்னை: திருவல்லிக்கேணியில் கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியது. பொதுமக்கள் விரைந்து மாட்டை விரட்டி அடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி நீளம் பாஷா தர்கா பகுதியை சேர்ந்த சிறுமி ஜீவிதா(10). இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று திடீரென ஜீவிதாவை பார்த்ததும், ஆக்ரோசமாக முட்டி தள்ளியது. இதை பார்த்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு மாட்டிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
இருந்தாலும் சிறுமி மாடு முட்டி தூக்கி வீசியதில் காயம் அடைந்தாள். உடனே பொதுமக்கள் சிறுமியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் படி மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ச்சியாக மாடு முட்டி பொதுமக்கள் படுகாயமடைந்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post திருவல்லிக்கேணியில் தொடரும் சம்பவங்கள் 10 வயது சிறுமி மாடு முட்டி படுகாயம்: பொதுமக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.