×

மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த எம்.சாண்ட் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கார்த்திக் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் மணல் குவாரி நடவடிக்கைகள் அரசால் மட்டுமே செய்யப்படுகிறது. TN Sand செயலி மூலமாக பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து மணலை வாங்கி கொள்ளலாம். ஒரு யூனிட் மணலை 1000 ரூபாய்க்கு அரசு விற்பனை செய்து வருகிறது. ஆனால் திருச்சி கனிம வளத்துறையின் கனிம பொறியாளர், செயற் பொறியாளர், தஞ்சை கனிம வளத்துறையின் செயற் பொறியாளர் ஆகியோர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மணல் கிடங்கில் அவர்களுக்கு சொந்தமான நபர்கள் மூலமாக பதிவு செய்து மணலை 1000 ரூபாய்க்கு பெற்று கொள்கின்றனர். ஆனால் சட்டவிரோதமான முறையில் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு 10000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் அரசுக்கு பெருமளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆகவே மணல் விற்பனை தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்தினால் இதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்படும். ஆகவே அதை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை எண் 4-ஐ முறையாக அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் 3ம் வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.

The post மணல் விற்பனையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான அரசாணை பின்பற்றப்படுகிறதா?: நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Tamil Nadu government ,Madurai ,High Court ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...