திருநெல்வேலி: மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக விளங்கும் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அருவியில் குளிக்க நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. வெள்ளத்தில் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமான நிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. சீரமைப்புப் பணிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் பொதுமக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். 4 மாதங்களுக்குப் பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
The post 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்!! appeared first on Dinakaran.