×

மதுரையில் இருந்து மலைக்கு புறப்பட்டார் அழகர்; அப்பன் திருப்பதியில் நாளை திருவிழா

மதுரை: சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து மதுரை வந்த அழகர், மீண்டும் மலைக்கு புறப்பட்டுச் சென்றார். நாளை மறுநாள் உற்சவ சாந்தியுடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 23ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர், இன்று அதிகாலை 2.30 மணியளவில் மதுரை தல்லாகுளம் சேதுபதி மண்டபத்தில் இருந்து பூப்பல்லக்கில் எழுந்தருளி விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குச் சென்ற அழகர், பின்னர் ஒவ்வொரு மண்டகப்படியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காலை 11 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்ட அழகர் புதூர், மூன்றுமாவடி வழியாக நாளை (ஏப்.27) அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதிக்கு சென்றடைகிறார். அங்கு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகர் காலை 7 மணியளவில் கள்ளந்திரியை அடைகிறார். அங்கும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். தொடர் மண்டகப்படிகளில் காட்சி தரும் அழகர், நாளை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மலைக்கு சென்று சேருகிறார். கோயிலில் பக்தர்கள் மேளதாளம் முழங்க அழகரை வரவேற்று திருஷ்டி சுற்றி, கோயில் வளாகத்திற்குள் அழைத்துச் செல்வார். நாளை மறுநாள் (ஏப்.28) காலை உற்சவ சாந்தியுடன் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

 

The post மதுரையில் இருந்து மலைக்கு புறப்பட்டார் அழகர்; அப்பன் திருப்பதியில் நாளை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Alagar ,Madurai ,Appan Tirupati ,Alaghar ,Alagharmalai ,Chitrai festival ,Chitra festival ,Utsava Shanti ,Madurai Chitrai Festival ,
× RELATED அப்பன் திருப்பதி பகுதியில் வெண்டை சாகுபடி அமோகம்