×
Saravana Stores

பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!!

டெல்லி: தங்களது செயலியில் உள்ள பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டி இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்ஆப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலை யார் முதலில் பதிவிட்டது என்பதை அறியும் வகையில் பிரைவசி வசதிகளை மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மெட்டாவின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அந்த வழக்கு விசாரணையின் போது பொய் செய்திகள், கலவரத்தை தூண்டும் செய்திகளை முதலில் யார் பரப்பியது என்பதை அறிய இந்த திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ்ஆப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனிநபரின் தகவல்கள், தரவுகள் பாதுகாப்பாக இருப்பதால் தான் தங்கள் செயலியை பலர் பயன்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், End to End என்கிரிப்ஷன் எனப்படும் செய்தியை அனுப்புவர், பெறுபவரை தவிர மற்றவர்கள் அதனை பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டுள்ள வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் தங்கள் சேவையை நிறுத்த நேரிடும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற விதிமுறைகள் வேறு எந்த நாட்டிலாவது உள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது பிரேசிலில் கூட இதுபோன்ற விதிமுறைகள் இல்லை என வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைத்தள சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால் இந்தியாவில் சேவையை நிறுத்த வேண்டியிருக்கும்: வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : India ,WhatsApp ,Delhi ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...