* சாலைகளில் குடைபிடித்த படி செல்லும் மக்கள்
* பழக்கடைகளில் வியாபாரம் சூடு பிடித்தது
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் மக்கள் குடைபிடித்த படி சென்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது திருப்பத்தூர் மாவட்டம். வெயிலுக்கு பெயர் போன வேலூரின் அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 9 மணிக்கே சுட்டெரிக்கும் வெயில் சதத்தை அடிக்கும் அளவில் மக்களை வாட்டி வதைக்கிறது.
இதனால் பொதுமக்கள் வெளியே வராத முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் ஒரு மணி அளவில் உச்சி வெயில் எனப்படும் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நேற்று 106.04 டிகிரி வெயில் பதிவாகியது. வேலூரில் தற்போது 102 டிகிரி வெயில் பதிவான நிலையில், அதனை பின்னுக்கு தள்ளி திருப்பத்தூர் மாவட்டம் 106.04 டிகிரி வெயிலை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையை விட திருப்பத்தூரில் தான் அதிக அளவில் வெயில் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள குடை பிடித்த படி சாலைகளில் செல்கின்றனர். மேலும் கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க சாலை ஓரம் உள்ள நீர்மோர், கூழ், பழக்கடைகளில் பொதுமக்கள் திரண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்கின்றனர். இதனால் நீர்மோர் மற்றும் பழக்கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்த நிலையில், வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று பொதுமக்கள் நம்பி இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக தற்போது கடும் வெயில் சுட்டெரித்து சாலைகள் முழுவதும் கானல் நீர் ஓடுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
12 முதல் மாலை 4 மணி வரை வெளியே வரக்கூடாது
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகள் பரவி நாள்தோறும் மருத்துவமனைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு உண்டான ஆன்டிபயாட்டிக் எனப்படும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கோடையில் குறிப்பாக தோல் நோய்கள், அம்மை, தட்டம்மை, பெரியம்மை உள்ளிட்ட நோய்களும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனை தடுக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள், இளநீர், உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அருந்த வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டில் இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கருப்பு நிற ஆடைகள் உள்ளிட்டவைகளை அணியக்கூடாது. கதர் ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கே சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது 106 டிகிரி வெயில் பதிவால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.