* 7 ஆண்டுகளுக்கு பிறகு 2 ஆயிரம் பழங்கள் அறுவடை செய்யலாம்
தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் எலுமிச்சை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். தமிழர்கள் மத்தியில் திருமணங்கள், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் மருத்துவ குனங்கள், குளிர்பானங்கள் என்று தொன்று தொட்டு எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வருவதால் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களின் தினந்தோறும் பயன்படுத்தி வருவதால் இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எலுமிச்சை சாகுபடியில் அதிக மகசூலை தரும் வீரிய ஒட்டு ரகங்கள் இல்லை. இதனால் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்ட ரகங்களை மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றனர். இதில் பி.கே.எம் 1, சாய்சர்பதி, பிரமாலினி, விக்ரம், தெனாலி ஆகிய ரகங்களில் உள்ளது. மஞ்சளாகவும், உருண்டையாகவும் இருப்பது சாதாரண எலுமிச்சை அல்லது செடி எலுமிச்சை என்று அழைக்கப்படுகிறது. இதேபோல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றுப் பெரிதாக இருப்பது செடி எலுமிச்சை அல்லது லெமன் என்று அழைக்கப்படுகிறது.
இவற்றில் சமவெளியில் பயிரிடுவதற்கு சாதாரணச் செடி எலுமிச்சையே ஏற்றது ஆகும். இதேபோல் ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.விதைகளில் உருவான நாற்றுகளை மட்டுமே சாகுபடி செய்கின்றனர். நல்ல வளர்ச்சி, அதிகமான காய்ப்புதிறன், நோய்கள் மற்றும் பூச்சித்தாக்குதல் குறைவான மரங்களில் விளைந்த பழ விதைகள் மூலம் நாற்றுகளை உருவாக்க வேண்டும்.
இதேபோல் பழங்களில் இருந்து பிரித்து எடுத்த விதைகளை 1 முதல் 2 நாட்களில் மேட்டுப்பாத்தி நாற்றங்காலில் விதைத்து விட வேண்டும். 60 முதல் 65 நாள் நாற்றுகளை நெகிழிப் பைகளுக்கு மாற்றி பின்னர் 10 முதல் 12 மாத நாற்றுகளை நடவு செய்தால் நல்லது.சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது சமப்படுத்த வேண்டும். 5 க்கு 5 மீட்டர் அல்லது 6 க்கு 6 மீட்டர் இடைவெளியில், ஒரு ஏக்கருக்கு 120 முதல் 150 குழிகள் குழிகளை அமைக்கலாம்.
75 செ.மீ நீளம், ஆழம் மற்றும் அகலத்தில் தோண்டப்பட்ட குழிகளை 15 நாட்களுக்கு ஆறப்போட வேண்டும். பின்னர் மக்கிய தொழு உரம், செம்மண், மணல், குழியின் மேல் மண், லிண்டேன் ஒரு சதவீத தூள் ஆகியவற்றை கலந்து குழியில் இட்டு பாசனம் செய்தால் குழியில் உள்ள மண் மட்டம் கீழே இறங்கும். இந்த நிலையில் குழிகளின் நடுவில் கன்றுகளை நட்டு அவற்றைச் சுற்றி உள்ள மண்ணை காலால் மிதித்து இறுக்கிவிட வேண்டும். கன்றுகள் காற்றில் சாயாமல் இருக்க குச்சிகளை வைத்துக் கட்டுவதோடு மண்ணின் தன்மைக்கு ஏற்ப நடவு செய்து 3 ம் நாள் பாசனம் தர வேண்டும்.
எலுமிச்சை சாகுபடியின் போது 90 செ.மீ உயரம் வரை சிம்புகள் இல்லாமல் தண்டு நேராக வளரும் வகையில் காவத்து செய்ய வேண்டும். இதனால் வலிமையான அடிமரம் அமைவதுடன் காய்கள் விரையில் காய்க்க தொடங்கி தரையில் படாமல் இருக்கும். எலுமிச்சை வேர்கள் நிலத்தில் ஆழமாக செல்வதில்லை. 30 செ.மீ ஆழத்தில் வேர்கள் இருப்பதால் மரத்தின் அடியில் கொத்தக்கூடாது.
முதல் 4 ஆண்டுகள் வரையில் ஊடுபயிர் சாகுபடி செய்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். இதேபோல் அடிக்கடி கைகடகளை எடுப்பதை விட களைக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம்.எலுமிச்சை சாகுபடியில் ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைத்தாலும் மார்கழி, தை (டிசம்பர், ஜனவரி) மற்றும் ஆடி, ஆவணி (ஜூலை, ஆகஸ்ட்) மாதங்களில் பழங்கள் அதிகமாக கிடைக்கும். நடவு செய்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் காய்ப்புக்கு வரும். மேற்படி முறைகளில் நன்றாக பராமரித்து வந்தால் நடவு செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து 1500 முதல் 2 ஆயிரம் பழங்கள் அறுவடை செய்து நல்ல லாபம் பெறலாம்.
The post ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற பருவம் எலுமிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.