*புதுச்சேரியில் புற்றீசல்போல் பெருகிய தொழில்
புதுச்சேரி : சிறந்த சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க எப்படி போவது… எதில் போவது என்பதற்கு விடையளிக்கும் வகையில் இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் புற்றீசல்போல் பெருகி இருப்பது வெளி மாநிலத்தவரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரி என்றாலே சுற்றுலாவுக்கு பெயர் போனது. பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள், படகு குழாம்கள், ஆரோவில் மாத்ரி மந்திர் என முக்கியமானவற்றை காண்பதற்கு வெளிமாநில மக்கள் மட்டுமல்ல வெளி நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களது பிடித்த சுற்றுலா தலங்களுக்கு எப்படி போவது… எதில் போவது… என்பதற்கு விடையளிக்கும் வகையில் புற்றீசல்போல் புதிய தொழிலாக இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் தற்போது பெருகிக் கிடக்கிறது. நகர பகுதியான மிஷன் வீதி, காந்தி வீதி மற்றும் அதை சுற்றியுள்ள கடை வீதிகளில் செயல்படும் இருசக்கர வாகன வாடகை நிலையங்களில் விதவிதமான பைக்குகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை வாடகைக்கு எடுத்துச் சென்றுவிட்டு சேதாரம் இல்லாமல் கொண்டு வந்து திரும்ப விட்டுவிட்டால் போதும். குறைந்த வாடகையில் முக்கிய இடங்களை எல்லாம் சுற்றிப்பார்த்துவிட முடியும்.
அந்த வகையில் பைக்குகள் மட்டுமின்றி சைக்கிள்கள், கார்களும் வாடகைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. சைக்கிள் நாள் ஒன்றுக்கு ரூ.100க்கும், பைக்குகள் ரூ.250 முதல் ரூ.1,000 வரையிலும், கார்கள் ரூ.1,500க்கும் வாடகைக்கு விடப்படுகிறது. விதவிதமான, புதுப்புது அறிமுக பைக்குகளும் வாடகைக்கு கொடுக்கப்படும் நிலையில் இதுபற்றி இருசக்கர வாகன வாடகை நிலைய உரிமையாளர்களிடம் விசாரித்தபோது, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நமது மாநிலத்தின் பெருமையை நேரில் சென்று பார்த்து ஆனந்தம் காணும் வகையில் குறைந்த கட்டணத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு தருகிறோம்.
வண்டியை எடுக்கும்போது அரை லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொடுத்து அனுப்புவோம். வாடகைக்கு வண்டியை எடுப்பவர்கள் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்கு ேதவையான வகையில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சென்று திரும்பி வரலாம். வண்டியை முன்பின் அறிமுகம் இல்லாத சுற்றுலா பயணிகளை நம்பிதான் கொடுக்கிறோம்.
இதை பார்க்கும் உள்ளூர் மக்கள் வடிவேலு படபாணியில் விலையுயர்ந்த வண்டிகளை யாரேனும் நிரந்தரமாக ஓட்டிச் சென்று விட மாட்டார்களா? என கேட்கின்றனர். இதுபோன்ற சம்பவமும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் வாடகைக்கு வண்டிகளை கேட்கும் சுற்றுலா பயணிகளிடம் ஒரிஜினல் ஆவணங்களை பெற்றுக் கொண்டும், தேவைப்பட்டால் சிலரிடம் டெபாசிட் பணமும் வாங்கிக் கொண்டும்தான் வண்டி சாவியை கொடுக்கிறோம்.
காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒருநாள் வாடகையாக கணக்கிட்டு வண்டிகளை வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்கின்றனர். அடுத்த நாள் வண்டியை எடுத்து வந்தால் 2வது நாள் வாடகையாக கணக்கிட்டு பெறுவோம். சிலர் மாத வாடகைக்குகூட எங்களிடம் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 என மாதம் ரூ.3,000 வாடகை பெறுவோம். வாடகைக்கு எடுத்துச் செல்லப்படும் வண்டிகள் ஏதேனும் சேதம் ஆகியிருந்தால் வாடகைதாரர்கள்தான் முழு பொறுப்பு என்றனர்.
அனுமதியில்லாத கடைகள் மீது நடவடிக்கை
புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது, புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனம் மூலம் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். ஆனால் உள்ளூர் மக்கள் மற்றும் சமூக அமைப்புகள், வாடகைக்கு விடப்படும் வாகனங்களை, மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும், விதிகளை மீறியுள்ளதாகவும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அதன்படி இன்னும் சில வாரங்களில் புதுவை முழுவதும் வாடகைக்கு விடப்பட்டுள்ள இரு சக்கர வாகன கடைகள் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முழுமையான கண்காணிப்பு தேவை
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, புதுச்சேரியில் முதலில் 2 அல்லது 4 இடங்களில் மட்டும் இருசக்கர வாகனம் வாடகைக்கு விடப்பட்டது. தற்போது நகரப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாடகை கடை வந்துவிட்டது. அதில் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் நடத்தப்படுகிறது. மேலும் புதுவையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட வாடகை வண்டிகளை ரவுடிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதை தடை செய்யக்கோரி தொடர் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
போக்குவரத்து துறை சார்பில் 4 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் வண்டிகள் வாடகைக்கு விடப்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் இவற்றை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பாதிக்கும் ஆட்டோ தொழில்
புதுவையில் சுற்றுலா பயணிகளிடம் இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றாலும், உள்ளூர் மக்கள் அதை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இப்போது போக்குவரத்துறை அனுமதியின்றி இவை செயல்படும் நிலையில், இதுபோன்ற வாடகை நிலையங்களை முறைப்படுத்தி அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுமென சுற்றுலாவாசிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளன. ஆனால் ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் மத்தியில் வாடகை வாகன நிலையங்களுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post எப்படி போவது… எதில் போவது… என்பதற்கு விடை சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமான இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் appeared first on Dinakaran.