*மண் அரிப்பால் கரைகளும் பலமிழந்து கிடப்பதாக புகார்
சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள பொன்ராஜ் குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பெயரளவில் நடந்து இருப்பதாகவும், மண் அரிப்பால் கரைகள் பலமிழந்து கிடப்பதாகவும் விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் மேலப்பட்டி, சமத்துவபுரம், வெள்ளையம்மாள்புரம், மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, தென்பழனி, காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் வாழை, தென்னை, திராட்சை, தக்காளி, துவரை, உளுந்து, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதியில் பாசனத்திற்கு பற்றாக்குறை இல்லாமல் நிலத்தடி நீர் அதிகளவில் பெற்று விவசாயத்தை தொய்வின்றி செய்திட பேரூராட்சி நிர்வாகம், பொதுப்பணி துறையினரிடம் இப்பகுதியில் கண்மாய்கள், குளங்கள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர்.
45 ஏக்கர் நிலம் அரசுக்கு தானம்
ஹைவேவிஸ் பெருமாள் மலை சுற்றியிருக்கும் நீண்ட மலையடிவாரத்தில் ஓடைப்பட்டி பேரூராட்சி நிலங்கள் அமைந்துள்ளன. இம்மலை அடிவாரத்தில் உள்ள தம்பிரான் ஊற்று பகுதியில் மழை பெய்யும் போது அதிகளவு நீர் பெருக்கெடுத்து தண்ணீர் தேங்குவதற்கு போதிய குளம், கண்மாய் இல்லாமல் இருந்தது. அதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓடைப்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் தம்பிரான் ஊற்று பகுதி சாலையின் வழியாக இருக்கும் தனக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக வழங்கினார்.
அந்நிலத்தை பெற்று கொண்ட ஓடைப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயிகளின் பாசனத்திற்கும் மெகா பள்ளங்கள் தோண்டி, கரைகள் அமைத்து குளத்தை உருவாக்கினர். இந்நிலத்தை கொடுத்த பொன்ராஜின் பெயரையே அக்குளத்திற்கு வைத்து அவரை கவுவுரப்படுத்தினர்.
கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை
பின்னர் மழைக்காலங்களில் தம்பிரான் ஊற்று பகுதியில் இருந்து வரும் நீர் மற்றும் மலையடிவார பகுதியில் இருந்து வரும் மழைநீரும் இக்குளத்தில் தேக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த 20 ஆண்டுகளாக இக்குளத்தின் தெற்கு கரை பகுதிகளை மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து நிலங்களாக மாற்றி அதில் திராட்சை கொடிகளை வளர்த்து ஆண்டிற்கு 3 முறை பலன் ஈட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக குளத்தின் பாதியளவு சுருங்கி விட்டதால் நிலத்தடி நீருக்கு பற்றாக்குறை உண்டாகி விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பொன்ராஜ் குளத்தினை மீட்டெடுக்க வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதைய ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு
அதன்பின் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு ஐகோர்ட் உத்தரவின்படி தமிழகத்தில் விவசாயத்தை காக்கும் விதமாகவும்,பொதுமக்களின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தவும் குளங்கள், கண்மாய்களின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி பொன்ராஜ் குளத்திற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கரைகளை பலப்படுத்தி தூர்வாரி நடவடிக்கை எடுக்க ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து இப்பணிகளை ஏலம் எடுத்த ஏலதாரர் 3 மாதத்திற்கும் மேலாக பணிகள் செய்து வந்தார். அதில் ஒரு பகுதி முழுவதும் கரையை உயர்த்தி சிமெண்ட் சிலாப்புகள் பதித்து அரைகுறையாக பணி செய்துள்ளார். மேலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் விட்டதால் திராட்சை தோட்டங்கள் உள்பட அப்படியே கிடக்கிறது. மேலும் குளத்தில் அள்ளிய மண்ணை கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த அரைகுறை பணிகளால் கடந்த மாதங்களில் பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் அரிப்பு ஏற்பட்டு பலமிழந்து பள்ளம், மேடுகளாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொன்ராஜ் குளத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விவசாய பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.