- குருஞ்சிப்பாடி
- கடலூர்-விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலை
- கடலூர் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
*விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வடலூர் : குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியில் ரூ.18 கோடியில் நடந்து வரும் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர்-விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் பச்சையாங்குப்பம் முதல் விருத்தாசலம் வரை இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்துதல் பணி மற்றும் பாலங்கள், சிறு பாலங்கள், கான்கிரீட் வடிகால், சாலை மைய தடுப்பான்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான சிவிஎஸ் எனப்படும் கடலூர்-விருத்தாசலம்-சேலம் (சின்னசேலம் கூட்ரோடு) தேசிய நெடுஞ்சாலையில், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி சுப முகூர்த்த நாட்கள், தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து சாலையை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் கடலூர் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையில் அன்னவல்லி, வன்னியர்பாளையம், பெரிய காட்டு சாகை, சுப்பிரமணியபுரம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, த.பாளையம், வடலூர், நெய்வேலி, மந்தாரக்குப்பம், ஊமங்கலம், விருத்தாசலம் புறவழி சந்திப்பு, பரவலூர், விளாங்காட்டூர் உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் அடிக்கடி நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டன. இதை தொடர்ந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த ஆண்டு குள்ளஞ்சாவடி சந்திப்பில் ரூ. 3 கோடியில் சென்டர் மீடியன் வடிகால் வசதியுடன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிற பகுதிகளில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் அருகே புறவழிச் சாலை நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விபத்துகளை தவிர்க்கவும் மேம்பாலம் அமைக்க ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சர்வீஸ் சாலையுடன் பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முன் மணல் மூட்டைகள் அடுக்கி மண்ணின் தாங்கும் தன்மை பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ந்து மண் பரிசோதனை முடிந்து கடந்த 2022ம் ஆண்டு துவங்கபட்டது. இந்த பணிகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் மந்தமாக நடந்து வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், இச்சாலை கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மிகவும் முக்கியமான சாலையாகும்.
இதில் கடலூர் அருகே சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகள், நெய்வேலியில் என்எல்சி இந்தியா பொது நிறுவனம், வடலூரில் உலக புகழ்பெற்ற வள்ளலார் தெய்வநிலையம், மேலும் வடலூரில் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது.எனவே இச்சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.
அது மட்டும் இன்றி அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவாக முடித்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க முடியும், என்றனர்.
The post ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி appeared first on Dinakaran.