- அரியமான் கடற்கரை
- ராமேஸ்வரம்
- அரியமான் குஷி கடற்கரை
- மண்டபம் ஒன்றியம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமேஸ்வரம் மண்டபம் ஒன்றியம்
*அடிப்படை வசதிகளும் இல்லை
*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அரியமான் குஷி பீச் பாலீத்தின் கழிவு குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து கிடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் அமைந்துள்ளது மிக அழகிய அரியமான் குஷி பீச். தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய கடற்கரை இது. அழகிய மணல் கரைகள் மற்றும் அமைதியான இயற்கை சூழலுக்கு பெயர் பெற்றது.
கடற்கரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வெண்மையான மணல் பரப்பால் நீண்டுள்ளது. அதே தூரத்திற்கு கடற்கரை மணலை ஒட்டி அடர்த்தியான சவுக்கு மரங்கள் நிறைந்த நிழல் பகுதி உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த கடற்கரைக்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரையை மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இருந்து தினசரி சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் அரியமான் கடற்கரையில் சுத்தமான கழிப்பறை, வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான பார்க்கிங், குடிநீர் வசதிகள் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. தினசரி குப்பைகளை அகற்றாததால் சவுக்கு மரத்தின் நிழல் பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவியலாக கிடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுத்து செல்வதை தவிர்த்து நேராக கடற்கரைக்கு செல்கின்றனர்.
மேலும் மதுப்பிரியர்களால் ஆங்காங்கே வீசப்படும் பாட்டில்கள் உடைந்து மணலில் புதைத்து கிடக்கிறது. இது காலணிகள் இல்லாமல் செல்வோரின் கால்களில் ரத்த காயம் ஏற்படுத்துகிறது. பார்த்து ரசித்து செல்லும் இயற்கை சூழல் நிறைந்த இந்த சவுக்கு கடற்கரை பகுதி குப்பைகாடாக மாறி வருகிறது.
இதனால் இங்கு குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து கடற்கரைப் பகுதி பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இயற்கை நிறைந்த சுற்றுலாத்தலமான அரியமான் கடற்கரையில் பாலித்தீன் கழிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், முறையாக பராமரிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வசதிகளே இல்லாத இடத்திற்கு கட்டணம்
மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரியமான் கடற்கரை சாலையில் ரயில்வே கேட் முன்பாக கட்டண சாவடி அமைத்து இருசக்கர வாகனத்திற்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்கத்திற்கு ரூ.30, கனரக வாகனத்திற்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முறையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கடற்கரைக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்திவிட்டு, அதன்பிறகு கட்டணம் வசூலிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு
மலைப்பகுதிகளில் இருப்பது போன்று இங்கு இயற்கையான சவுக்கு மரங்கள் நெருக்கமாக வளர்ந்துள்ளது. இப்பகுதியில் பிளாஸ்டிக் பை, பிஸ்கட் கவர், வாட்டர் பாட்டில், சரக்கு கப் மற்றும் மது பாட்டில்கள் என பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. இது மணலில் புதைந்து மண் வளத்தை மாசு அடையச் செய்து மரங்களின் வாழ்நாளை குறைக்கும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாமல் குவித்து வைத்து தீ வைத்து எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
மேலும் சவுக்குமர பகுதியில் அதிகமாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்வளத்தை குறைத்து இயற்கையாக வளரும் மரங்களை அழித்து வருகிறது. மணலுக்குள் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வரும் ரசாயனம் நிலத்தில் தேங்கி மண்வளத்தை மாசு அடையச் செய்கிறது. மேலும் இங்கு உணவுகளுடன் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் சாப்பிட்டு குடல் நோய் பாதிப்புக்கு உள்ளாகிறது.
The post தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை appeared first on Dinakaran.