×

சுட்டெரிக்கும் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க திருச்சி சிக்னல்களில் நிழற்பந்தல் அமைப்பு

*வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருச்சி : திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக திருச்சி வெப்ப அலை வீசி வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள் குடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் சாலையோரம் ஆங்காங்கே உள்ள கடைகளில் பழச்சாறு அருந்தியும், இளநீர், குளிர்பானங்கள் வாங்கி குடித்தும் வெயிலின் தாக்கத்தை மக்கள் குறைத்து வருகின்றனர். அனல் காற்று வீசி வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெயிலில் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில் ஆங்காங்கே உள்ள முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் நிற்கும்போது வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக நிழற்பந்தல் அமைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திருச்சி புத்தூர் நால்ரோட்டில் அரசு மருத்துவமனையில் இருந்து உறையூர் செல்லும் சாலை சிக்னலில் நிழற்குடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் இந்த பந்தலில் நின்று வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகின்றனர். இதேபோல் தபால் நிலையம் சிக்னல் மற்றும் மாநகரில் முக்கிய இடங்களில் உள்ள சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post சுட்டெரிக்கும் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க திருச்சி சிக்னல்களில் நிழற்பந்தல் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்