ஜெயங்கொண்டம் ஏப்.26: அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகள், பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்றது, கோடை காலம். நிலத்தில் பயிரிடும் முன்பு, அந்த நிலத்தின் மண்ணை பரிசோதனை செய்வதன் மூலம் தேவைப்படும் உரங்களை இட்டு நல்ல மகசூலை பெற முடியும்.
இதனால், உரச்செலவை குறைக்க முடியும். மண்ணின் இயல்பு தன்மையை காக்க முடியும். மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து அதன் அடிப்படையில் பயிர்களின் தேவைக்கு ஏற்ப சமச்சீராக உரமிட முடியும். இந்த ஆய்வில் மண்ணின் கார அமில நிலை, மின் கடத்தும் திறன், அங்கக கரிம நிலை, பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களான இரும்பு,
துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம், போரான் அளவுகள் தரப்படுவதால் அதன் அடிப்படையில் அடுத்த பயிருக்கான உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. எனவே விவசாயிகள் அனைவரும் மண் பரிசோதனை செய்து உர விரயத்தை குறைத்து மண் வளத்தை பாதுகாக்குமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி கேட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
The post பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.