×
Saravana Stores

உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நோய் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்றனர் செய்யாறு, ஆரணியில்

செய்யாறு, ஏப். 26: செய்யாறு, ஆரணியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நோய் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்றனர். செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம் மருத்துவ அலுவலர் யோகேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் வரவேற்றார். நிகழ்ச்சியில் யோகேஸ்வரன் மருத்துவர் பேசியதாவது: மலேரியா நோய் பரப்பி கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகிறது. திறந்த வெளி நீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், சுத்தமான நீர் தேக்கம், மழைநீர், வயல்வெளி, குளம், குட்டை, வாய்க்கால் கட்டுமான பணியிடத்தில் உள்ள நீர்த்தேக்கம் கிணறு தொட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து வைக்கும் பாத்திரங்கள் மேல்நிலை தொட்டிகள் தூக்கி வீசப்பட்ட பாத்திரங்களின் தேங்கியுள்ள மழை நீர் ஆகிய பகுதிகளில் இக்கொசு வளர்கிறது. மலேரியா நோயின் அறிகுறிகள் அதிகமான காய்ச்சல் நினைவு இழத்தல், குழப்பம் நடக்க முடியாமல் மயக்கம், வாந்தி, சிறுநீர் பிரியாத நிலை கடுமையான வயிற்றுப்போக்கு மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு கடுமையான நீர் இழப்பு ரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நர்சுகள் புவனேஸ்வரி, ஜெயப்பிரதா, ரேவதி, நிர்மலா கலந்து கொண்டனர்.

ஆரணி: ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நேற்று உலக மலேரியா தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் அருளரசு, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன் வரவேற்றார். இதில், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு மருத்துவ அலுவலர் மேஜர் சிவஞானம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, இந்த ஆண்டில் உலகம் முழுவதும் மலேரியா நோயை ஒழிப்பதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை அடையும் பொருட்டு அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும். மேலும் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணி மூலம் பெண் அனாபிலஸ் என்ற கொசுவின் மூலம் மலேரியா பரவுகிறது. அதனால், மாலை நேர காய்ச்சல்,கடுங்குளிர்,உடல் வலி போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். மேலும், உரிய நேரத்தில் நோய் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முன்னதாக, மலேரியா நோய் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மலேரியா நோய் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

The post உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நோய் எதிர்ப்புக்கான உறுதிமொழி ஏற்றனர் செய்யாறு, ஆரணியில் appeared first on Dinakaran.

Tags : Day ,Seyyar, Arani ,Seyyar ,World Malaria Day ,World ,Malaria ,Awareness Camp ,Officer ,Nateri Government Primary Health Center ,Seiyaru ,Arani ,Dinakaran ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக...