×

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்

நாகர்கோவில், ஏப். 26: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும், வருகிற ஜூன் 4ம் தேதி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. அங்கு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குப்பெட்டிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,698 வாக்கு சாவடிகளில் இருந்து வந்த வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசாரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதே போல் வாக்கு எண்ணிக்ைக மையத்தில் அடிப்படை பணிகளுக்காக வரும் தொழிலாளர்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி போலீசார் பைக்கில் ரோந்து வருகின்றனர். வாக்கு எண்ணும் ைமயத்தில் தீயணைப்பு வீரர்களும் 24ம் நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நவீன லாரி மூலம் அவர்கள் ஆயத்தமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை பார்வையிட்டார். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்களின் வருகை பதிவேடுகளையும் சரியாக கையாளப்படுகிறதா என ஆய்வு செய்தார். எஸ்பியுடன் போலீஸ் அதிகாரிகள் உடன் வந்தனர்.

நான்கு அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி., 2 டி.எஸ்.பி.க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 100 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மொத்தம் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திர அறை முன் மத்திய பாதுகாப்புபடை போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி தற்காலிக பாதுகாப்பு டவர்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

The post கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார் appeared first on Dinakaran.

Tags : SP ,Konam Government College of Engineering ,Nagercoil ,Kanyakumari Parliamentary Constituency ,Vilavankode Assembly Constituency ,Government College of Engineering ,Konnam Government Engineering College ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?