×

வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர், ஏப்.26: வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால் அந்தந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்கள் சி.ஜெயக்குமார், கார்த்திகேயன், என்.பாலு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் கேரளாவில் இன்றும், கர்நாடகாவில் முதல் கட்டமாக இன்றும், இரண்டாவது கட்டமாக மே 7ம் தேதியும், ஆந்திராவில் மே 13ம் தேதியும் நடைபெற உள்ளது. எனவே இந்த மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தேர்தல் நாளில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க வசதியாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை சார்பில் மாநில அளவிலும், திருவள்ளூர் மாவட்டத்துக்காக என பிரத்யேகமாக மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை ஆகிய தாலுகாகளில் உள்ள தொழிற்சாலைகளின் கட்டுப்பாட்டு அறை அலுவலராக நியமிக்கப்பட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சி.ஜெயக்குமாரை 9176222394 என்ற எண்ணிலும், மாதவரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய தாலுகாக்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் கார்த்திகேயனை 9444221011 என்ற எண்ணிலும், கும்மிடிப்பூண்டி தாலுகாக்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் என்.பாலுவை 9486918205 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எவ்வித பிடித்தமும் கூடாது
திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பெ.ஷோபனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘100‘ சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலம் சென்று வாக்களிக்கும் வகையில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் தொழிலாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 (பி)ன் படி வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு நாளன்று பணிக்கு வராத குறிப்பிட்ட மாநிலங்களின் பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தேர்தல் விடுமுறை கட்டுப்பாட்டு அறை அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: தொழிலக பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Industrial ,Safety ,C. Jayakumar ,Karthikeyan, N. Balu ,Dinakaran ,
× RELATED திருமழிசை, விச்சூர்...