மதுரை: பாஜவிற்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் ஓட்டுகள் நீக்கப்பட்டதை முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்களே என்று அண்ணாமலையை அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கலாய்த்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி தனது பரப்புரையில் மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக் கூடாது. சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இப்படி பேசுவது அழகல்ல.
இது போன்று நாடு சந்தித்தது இல்லை. தற்போது மரபை மீறி உள்ளார்களா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68,300 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பாஜவிற்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால், முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.
தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள். இந்த தேர்தல் உடன் காணாமல் போய்விடுவார். தமிழ்நாட்டுக்கு தலைவர் என்று சொன்ன ஒருவர் (ஓபிஎஸ்), இன்றைக்கு ஒரு தொகுதியில் தலைவராய் உள்ளார். தேர்தலுக்கு பின்பு அவரும் காணாமல் போய்விடுவார்’’ என்றார்.
The post பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே வாக்காளர் பட்டியலை பார்ப்பாங்க…அண்ணாமலையை கலாய்த்த அதிமுக மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.