புதுடெல்லி: இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா பரபரப்பு அறிக்கை வௌியிட்டுள்ளது. அமெரிக்கா ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நடைமுறைகள் குறித்த அறிக்கையை வௌியிட்டு வருகிறது. அதன்படி “2023 ஆண்டின் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா” என்ற தலைப்பில் அமெரிக்க வௌியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அறிக்கையை வௌியிட்டுள்ளார். அதில்,இந்தியாவில் மனித உரிமைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்டீஸ், குக்கி சமூகத்தினரிடையே இனமோதல்கள் வெடித்தன. இதனை தொடர்ந்து அங்கு மனித உரிமை மீறல்கள் அரங்கேறின. 2016-22க்கு இடையே சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டத்துக்கு புறம்பான 813 என்கவுன்டர் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாடு கடந்த அடக்குமுறை” என்ற தலைப்பில் பத்திரிகையாளர்கள், புலம்பெயர்ந்தோர், சிவில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீது இந்தியா அடக்குமுறையை கையாள்கிறது.
மேலும் மோடியின் குடும்ப பெயர் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின் ராகுல் காந்தி மீதான தடை நீக்கம் பற்றி அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் குஜராத் கலவரம் தொடர்பான பிபிசியின் ஆவணப் படம் வௌியானதை தொடர்ந்து பிபிசி அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை, தன்னிச்சையான கைது அல்லது காவலில் வைத்தல், வாக்குமூலங்களை சித்ரவதை செய்தல், மீண்டும், மீண்டும் இணைய முடக்கம், தடை செய்யப்பட்ட தொலைதொடர்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
* இந்தியா கண்டனம்
அமெரிக்காவின் அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய வௌியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “அமெரிக்காவின் அறிக்கை ஒருபக்க சார்புடையது. இந்தியாவை பற்றிய அமெரிக்காவின் மோசமான புரிதலை இது காட்டுகிறது. அமெரிக்காவின் அறிக்கைக்கு நாங்கள் எந்த மதிப்பையும் தரவில்லை” என்று தெரிவித்தார்.
The post இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு: அமெரிக்கா பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.