×
Saravana Stores

2024-25ம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் சேர்க்கை: இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம்

சென்னை: 2024-25ம் ஆண்டிற்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், விளையாட்டு விடுதி மற்றும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று முதல் ஆன்லைனில் தொடங்குகிறது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் இன்று www.sdat.tn.gov.in மற்றும் tntalent.sdat.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு மே 5ம் தேதியும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு மே 6ம் தேதியும், விளையாட்டு விடுதி மே 8ம் தேதி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைபேசி 9514000777 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். தேர்வு போட்டியில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2024-25ம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் சேர்க்கை: இன்று முதல் ஆன்லைனில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Sports Development Authority ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர்ப்புற...