- அஇஅதிமுக
- புதுக்கோட்டை
- ஊழல் எதிர்ப்பு
- அமைச்சர்
- சி. விஜயபாஸ்கர்
- சி. விஜயபாஸ்கர்
- Ilupur
- எதிர்ப்பு-
- துறை
- தின மலர்
புதுக்கோட்டை: வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மனைவியை விடுவிக்க லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ. முன்னாள் அமைச்சரான இவர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக ெசயலாளராகவும் உள்ளார். அதிமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது 2021ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடந்தது.
சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 216 பக்க குற்றப்பத்திரிக்கை கடந்தாண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த மார்ச் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் எப்ஐஆரை கேட்டு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இதேபோல் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர், அவரது மனைவியுடன் ஆஜரானார். லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜரானார். இந்த வழக்கின் எப்ஐஆரை கேட்டு அமலாக்கத்துறை அளித்த மனு தொடர்பாக, அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் அளித்த பதிலில், ‘ஆவணங்களை அளிக்க கூடாது. வேண்டுமென்றால் நேரில் பார்வையிட்டுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டது. இதேபோல் விஜயபாஸ்கர், அவரது மனைவியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கூடாது என்று லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெயஆனந்த் உத்தரவிட்டார்.
The post வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர், மனைவியை விடுவிக்க லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு: விசாரணை ஜூன் 12ம் தேதி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.