திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.5 லட்சம் ஊழியர்கள், 66 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரளாவில் மொத்தம் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. ஆகவே காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் 2.77 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். 194 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவுக்காக 25,231 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணியில் 1.5 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். 62 கம்பெனி மத்திய போலீஸ், 1500 தமிழக போலீஸ் உள்பட மொத்தம் 66,303 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கேரள ஏடிஜிபி எம்.ஆர். அஜித்குமார் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள வயநாடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்று துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் வந்த பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட உபகரணங்கள் விநியோகிக்கும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இவற்றை பெற்ற பின்னர் அதிகாரிகள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். திருவனந்தபுரம், திருச்சூர், பத்தனம்திட்டா, மலப்புரம், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், காசர்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணி முதலும், பத்தனம்திட்டாவில் இன்று காலை 6 மணி முதலும் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்தது. நாளை மறுநாள் (27ம் தேதி) மாலை வரை இந்த மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்தக்கூடாது என்றும், 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் நேற்று மாலை முதல் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் நாளை மாலை 6 மணிக்கு பிறகு தான் மதுக்கடைகள் திறக்கப்படும். இதற்கிடையே கேரளாவில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. கேரளா முழுவதும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் ஒன்றாக கூடி ஆடல், பாடல், மேளதாளங்களுடன் பிரசாரத்தை முடித்தனர். பிரசாரம் முடிவடையும் நேரத்தில் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி, பத்தனாபுரம், நெய்யாற்றின்கரை, மலப்புரம் உள்பட சில பகுதிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக நடந்த தடியடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து கருநாகப்பள்ளி காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் மற்றும் 4 போலீசார் காயமடைந்தனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் 19ல் வெற்றி பெற்றது. இந்த முறையும் இருபதிலும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கூட்டணியினர் கூறுகின்றனர். ஆனால் கடந்த 2004ல் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதைப் போல இந்த முறை தங்களுக்கு பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும் என்று இடதுசாரி கூட்டணியினர் உறுதியாக நம்புகின்றனர். கேரளாவில் இதுவரை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜ கூட்டணியும் இந்த முறை தங்களது வலிமையை காட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருவனந்தபுரம், திருச்சூர் தொகுதிகளையாவது நாங்கள் கைப்பற்றுவோம் என்று பாஜவினர் கூறுகின்றனர். இவற்றில் யாருடைய நம்பிக்கை பலிக்கப் போகிறது என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.
‘கொட்டிக் கலாசம்’;
கேரளாவில் கடந்த 40 நாட்களாக சூடு கிளப்பிய பிரச்சாரம் நேற்று ‘கொட்டிக் கலாசம்’ என்கிற பிரச்சார நிறைவு நிகழ்ச்சியாக விழாக்கோலத்துடன் அனைத்து கட்சிகளும் அந்தந்த தொகுதிகளில் நிறைவு செய்தன.
15 தொகுதிகளில் கடும்போட்டி;
கேரளாவில் திருவனந்தபுரம், ஆற்றிங்கல், திருச்சூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ கூட்டணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, மலப்புரம், பொன்னானி தவிர ஏனைய 15 தொகுதிகளிலும் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கேரளாவில் 20 தொகுதிகளுக்கு நாளை காலை வாக்குப்பதிவு: தேர்தல் பணியில் 1.5 லட்சம் ஊழியர்கள் appeared first on Dinakaran.