×
Saravana Stores

இமாலயப் பொய்கள், கோணிப் புளுகன் கோயபெல்ஸ் காலத்தில்கூட இல்லை…தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி: கி.வீரமணி விமர்சனம்

சென்னை: தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார் இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை’’ என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள நாட்டு நிலவரப்படி, ‘‘இந்தப் புளுகினை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியால் மட்டுமே சொல்ல முடியும்‘’ என்றுதான் மக்கள் கூறும் அளவுக்கு, பிரதமர் மோடி சொல்லும் இமாலயப் பொய்கள், கோணிப் புளுகன் கோயபெல்ஸ் காலத்தில்கூட கண்டுபிடிக்க முடியாதவைகளாகும்!பொய்யைத் தவிர வேறு எதையும் பேசாத பிரதமர்! பிரதமர் பதவியிலிருந்து தேர்தல் பிரச்சாரம் செய்த எவரும் இவ்வளவு கீழிறக்கமான, வெறுப்புப் பேச்சின் உச்சிக்குச் சென்றதே இல்லை.

வேதனை! வெட்கம்!! ஒரு சிறு உண்மைகூட கலப்பில்லாமல், அந்தந்தப் பகுதி மக்களின் மதவெறி, ஜாதிவெறி, புரியாமை, அறியாமையை மனதிற்கொண்டு, அதற்கேற்ப தனது பொய்யுரைகளை அடைப்பொழிவாகப் பேசுகிறார், பிரதமர் மோடி!காங்கிரஸ் மீது அபாண்ட குற்றச்சாட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளைப்பற்றி, அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைபற்றி முழுக்க தலைகீழாக்கி, வெள்ளையைக் கருப்பாக்கி, ‘பரியை நரியாக்கி’க் காட்டும் பிரச்சாரத்தை – பிரதேசங்களுக்கு ஏற்றவாறு செய்துவருவதைக் கண்டு, பொது நிலையாளர்கள், அறிவுசார் அறிஞர்கள் உட்பட பலரும் அருவருப்புக் கொள்கிறார்கள்.

‘‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹிந்துப் பெண்களின் கழுத்தில் உள்ள தாலியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள்’’ என்று அபாண்ட குற்றச்சாற்றினைக் கூறுகிறார், தேர்தல் பிரச்சார பீரங்கி மோடி! இவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, இஸ்லாமியப் பெண்கள் – ஆண்கள் – வீடுகள் எப்படி (கருவுற்றோர்கூட) குறி வைத்து நடத்தப்பட்டனர்? பிரதமர் வாஜ்பேயி அவர்களேகூட, அன்றைக்கு ஒன்றிய அரசின் இராணுவத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களை குஜராத்திற்கு அனுப்பி, அமைதியை நிலைநாட்டச் செய்தபோது, முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு ‘‘ராஜதர்மத்தைக் கடைப்பிடித்து நடங்கள்’’ என்று அறிவுரை கூறியது ஏன்? ‘‘நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்லுவேன்’’ என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பவில்லையா?
இப்படி எத்தனையோ முன் நடத்தைகள் ஏராளம் உண்டு.

திடீரென – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையினை திசை திருப்பி, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஹிந்துக்களின் சொத்துகளை, முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது’’ என்றார். திசை திருப்பும் தில்லுமுல்லுத்தனம்! பிறகு, அதனை சற்று மாற்றி, வார்த்தையை மாற்றி, ‘‘அதிகப் பிள்ளைகள் பெற்றவர்களுக்கே கொடுக்கவிருக்கிறது! ஆபத்து, ஆபத்து!’’ என்று திசை திருப்பி, தில்லுமுல்லுப் பிரச்சாரத்தில் ஈடுபடலாமா?சாம் பெட்ரோடா என்ற அறிவியல் ரீதியான பொருளியல் அறிஞர், இந்த யோசனையை முன்பு – பொருளியல்படி ‘‘ஓரிடத்தில் செல்வம் குவிதல் கூடாது’’ (Distribution of Wealth) என்று கூறிய தத்துவத்தைத் தலைகீழாக்கி, மக்கள் சொத்தைப் பிடுங்கிட காங்கிரஸ் திட்டம் என்பன போன்ற, ஆதாரமற்ற உண்மை கலப்பற்ற கப்சாக்களை நாளும் பரப்பி, அவரது ஆட்சியின் நிஜ உருவம்பற்றிய ஒப்பனைக் கலையும் வண்ணம் உண்மையைத் தலைகீழாக்கிக் காட்டும் வல்லுநராக வலம் வருகிறார்.

பொதுச்சொத்துகளைத் தனியாருக்குத் தாரை வார்த்த மோடி!மக்கள் சொத்தை – பொதுத் துறையான விமான நிலையங்களை, கப்பல் துறைமுகங்களை, தகவல் தொழில்நுட்பத் துறையின் 5-ஜி போன்ற முக்கிய பிரிவுகளை, நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தளங்களில் சிலவற்றை அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், டாட்டா, பிர்லாக்கள் போன்ற பெருமுதலாளிகளுக்கும் நீண்ட காலம் அல்லது 90 ஆண்டுகால குத்தகைக்குத் (மலிவு) தாரை வார்த்திருப்பது யார்?வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய்களை பண மோசடி செய்த வைர வியாபாரியான நீரவ் மோடி போன்ற பல பெருமுதலாளிகள் வசதியாக கோலாகல வாழ்வு நடத்திடுவது யாருடைய 10 ஆண்டுகால ஆட்சியில்? என்பதை மக்கள் அறிவார்கள்.

கோவிட்-19 என்ற கரோனா தொற்றுக் காலத்தில், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நசிந்ததும், ஏழைத் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப ரயில் வசதிகூட செய்து தராததால், நடந்தே சென்று, நடுவழியில் மாண்டவர்கள் கதை எளிதில் மறந்துவிடக் கூடியதா?அதேநேரத்தில், கரோனா காலத்தில் அதானி, அம்பானிகள் சொத்துகளோ பல கோடி ரூபாய் பெருகியது! கரோனா காலத்தில்கூட அவர்கள் 30 விழுக்காடு இலாபம் ஈட்டினார்களே! கரோனா காலத்திலும் கொள்ளையடித்த கார்ப்பரேட்டுகள்!நாளொன்றுக்கு 1000 கோடி ரூபாய் சம்பாதித்தவர்கள் அந்தப் பெருமுதலாளிகள் – அதற்கான பாதை போட்டு கொள்ளையடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

எந்தக் கட்சி ஆட்சிக் காலத்தில்?‘‘ஒட்டகம் ஓணானைப் பழிக்கலாமா?’’ உண்மையைத் திரிக்கலாமா? நாட்டில் ஒரு பொதுத் துறையை வலுப்படுத்தி, மக்கள் சொத்தை – மக்கள் சொத்தாக அவை நீடிக்க சுண்டு விரலையாவது அசைத்திருக்குமா மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி? வாய் நீளம் காட்டுவது – வக்கணையோடு வடிகட்டிய பொய்களைக் கூறுவது எவ்வளவு நாள் தொடரும்? சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம்கூட ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எல்லா காலமும் ஏமாற்ற முடியாது!அதைத்தான் நடைபெறும் 18 ஆவது பொதுத் தேர்தல்.

மக்கள் தீர்ப்பைக் கூர்மையாகக் காட்டவிருப்பதால், தோல்வியால் தாக்கப்படும் மோடி, தினமும் தனது பொய்த் தொழிற்சாலையை முடுக்கிவிட்டு, ‘‘முழக்கமிடுகிறார். அவரது பொய் முழக்கத்தைக் கண்டு, பாமர மக்கள்கூட ஏமாறத் தயாராக இல்லை!தோல்வியால் தடுமாறித் தடுமாறி பழியஞ்சா பேச்சுகளை உதிர்க்கும் மோடி! அவரது குஜராத்திலேயே தோல்வி மேகங்கள் வேகமாகத் திரண்டு விட்டதால், தடுமாறி, தடுமாறி இப்படி பழியஞ்சா பணி செய்து, பாரில் எவரும் உதவிட இல்லை என்பதால், அவரே இதுபோன்று செய்கிறார் போலும், எச்சரிக்கை! வாக்காளப் பெருமக்களே, ஏமாறாதீர்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இமாலயப் பொய்கள், கோணிப் புளுகன் கோயபெல்ஸ் காலத்தில்கூட இல்லை…தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி: கி.வீரமணி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Goebbels ,Modi ,Chennai ,Dravida ,Kazhagam ,President ,K. Veeramani ,Facebook ,
× RELATED ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி: இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு