×
Saravana Stores

நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை

நெல்லை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பி வழிகின்றன. நெல்லை ரயில் நிலையத்தில் தினமும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை காணப்படுகிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 தேர்வுகள் ஏற்கெனவே முடிந்து விட்டன. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவைத்தேர்தலும் முடிந்து விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் கோடை விடுமுறையை கொண்டாட சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்று வருகின்றனர்.

கோடை விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் வெளியூர் செல்ல அனைவரும் முதலில் தேர்வு செய்வது ரயில் பயணம் தான். குறைந்த கட்டணம், இருக்கை, படுக்கை வசதிகள், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசி, உணவு உண்டு செல்வது என ரயில் பயணமே ஒரு சுகமான அனுபவம் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக நெல்லையில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

மே மாதம் இறுதி வரை சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயிலை தவிர சென்னை செல்ல எந்த ரயில்களிலும் டிக்கெட் இல்லை. குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வதற்கு மே 15ம் தேதிக்கு பின்னர் கூட காத்திருப்போர் எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து புறப்படும் திருச்செந்தூர் – சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் காத்திருப்போர் பட்டியல் 62ஐ தாண்டி விட்டது. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சென்னை செல்ல காத்திருப்போர் எண்ணிக்கை 106ஐ தாண்டி விட்டது. அடுத்தடுத்து வரும் நாட்களிலும் காத்திருப்போர் பட்டியல் தொடர்கிறது.

இதனால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்களில் இடம் பிடிக்க கட்டுக்கடங்காத கூட்டம் திரள்கிறது. பலரும் முன்பதிவற்ற பெட்டிகளில் ்மூட்டை முடிச்சுகளுடன் இடம் பிடிக்க முண்டியடிக்கும் நிலை காணப்படுகிறது. சென்னை மட்டுமல்லாது கோவை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவும் ரயில்களில் இடமில்லை. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் அனைத்தும் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக நீண்ட வரிசை காணப்படுகிறது.

பல மணி நேரம் காத்திருக்கும் பலரும் காத்திருப்போர் பட்டியல் என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சென்னைக்கு முக்கிய ரயில்களில் இடம் கிடைக்காத பலரும் நாகர்கோவில் – சென்னை அந்தியோதயா எக்ஸ்பிரசை தேர்வு செய்யும் நிலை காணப்படுகிறது. இதனால் இந்த ரயிலிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்தத்தில் மே மாதம் இறுதி வரை இதே நிலை தான் அனைத்து ரயில்களிலும் உள்ளன.

The post நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nellai ,Nellai railway station ,SSLC ,Nella ,
× RELATED சுடலைமாடன் திருவிழா கதை மாடன்