மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் கனடாவில் இருந்து இன்று அதிகாலை விமானத்தில் வந்திறங்கிய கேன்டிடேட்ஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் வெற்றி பெற முயற்சிப்பேன் என்று குகேஷ் உறுதியளித்தார். கனடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற கேன்டிடேட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில், தமிழகத்தை சேர்ந்த இந்திய செஸ் வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதைத் தொடர்ந்து, கனடாவில் இருந்து விமானம் மூலமாக இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் பிரபல செஸ் வீரர் குகேஷ் வந்திறங்கினார். அவருக்கு விமானநிலையத்தில் இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அவர் படிக்கும் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் செஸ் சாம்பியன் குகேஷ் பேசுகையில், கனடாவில் நடைபெற்ற கேன்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது, எனக்கு சிறப்பான சாதனை. இதில் 7 சுற்றில் தோல்வியடைந்த பாதிப்பிலிருந்து வெளியேறி, இத்தொடரில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற முனைப்புடன் விளையாடினேன். தமிழக மக்கள் செஸ் போட்டிகளை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான், எனக்கு கேன்டிடேட்ஸ் செஸ் தொடரில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது. இதற்காக தமிழக அரசு மற்றும் ஆலோசனை வழங்கிய ரோல்மாடல் விஸ்வநாதன் ஆனந்த்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லிரென் வலிமையானவர். எனினும், நான் உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று குகேஷ் உறுதி தெரிவித்தார்.
The post சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு; உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முயற்சிப்பேன்: கேன்டிடேட் சாம்பியன் குகேஷ் உறுதி appeared first on Dinakaran.