புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமைய இருக்கிறது என்பதற்கான நகர் விவரம் (சிட்டி இன்டிமேஷன்) வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-25ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான சிட்டி இன்டிமேஷன் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
அதில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம். விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டும் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அதனையும் மாணவர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையே, ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதி தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு appeared first on Dinakaran.