நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தின் வலைத்தளத்தை போன்று போலி வலைதள பக்கத்தை உருவாக்கி சுற்றுலா பயணிகளிடம் பல்லாயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் வாகனசவாரி ஆன்லைனில் புக்கிங் செய்ய www.mudumalaitigerreserve.com என்ற வலைதள பக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை புலிகள் காப்பகம் வலைதள பக்கம் ஆன்லைன் புக்கிங் செய்ததாகவும் ஆனால் நேரடியாக வரும் போது அவ்வாறான புக்கிங் எதுவும் ஆகாமல் உள்ளதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் mudumalainationalpark.in என்ற போலியான வலைதள முகவரியை உருவாக்கி சுற்றுலா பயணிகளிடம் மோசடி கும்பல் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு முதல் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல் புக்கிங் ஒன்றிற்கு ரூ.7 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.10,000வரை வசூலித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வட மாநிலத்தை மையமாக கொண்டு செயல்படும் மோசடி கும்பலை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசாரிடம் முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. www.mudumalaitigerreserve.com என்ற வலைதள பக்கம் மட்டுமே முதுமலை புலிகள் காப்பகத்தின் அதிகார பூர்வ வலைதள பக்கம் என்றும் போலி வலைத்தளங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி வலைதளம்: பல்லாயிரம் ரூபாய் பணம் மோசடி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.