×
Saravana Stores

சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்

டெல்லி: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் சமூக நீதி கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் வாசித்தார் இந்தியாவின் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்பை தெரிவித்து வருவதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்டோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 50சதவீத இட ஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை முதலமைச்சர் விளக்கியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது மனதிற்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை வரவிருக்கும் நமது இந்தியா கூட்டணி அரசு ஆர்வத்துடன் நிறைவேற்றும் என உறுதியுடன் நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சமூக நீதி கருத்தரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி வில்சன் தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்த சமூக நீதிகான குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சமூக நீதி மீட்டெடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போன்ற அம்சங்கள் கொண்ட காங்கிரசின் தேர்தல் அறிக்கையை கண்டு அச்சமடைந்துள்ள மோடி கீழ்த்தனமான பொய்களை பேசிகொண்டுவருவதாக குற்றம் சாட்டினார். டெல்லியில் நடைபெற்ற சமூக நீதி கருத்தரங்கில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் சம்ருதா பாரத் அறக்கட்டளை தலைவர் புஷ்பராஜ் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

The post சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன் appeared first on Dinakaran.

Tags : India Alliances Parties Participate ,Social Justice ,India ,Wilson ,Delhi ,OPC ,S. C ,Chief Minister ,Muka Stalin ,I.N.D.I.A. ,Samrutha Bharat ,Lok Sabha elections ,India Alliances Parties Participate in Social Justice ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!