மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை 12 சதவிகிதம் வரை சரிந்துள்ளது. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிதாக கிரெடிட் கார்டு வழங்கவும் கோடக் மகிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கோட்டக் மகேந்திரா வங்கியின் பங்குகள் விலை கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.1843-ல் இருந்து ரூ.1602-ஆக சரிந்துள்ளது.
கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கிய செயல் திட்டங்களின்படி கோடக் மகிந்திரா வங்கி செயல்படவில்லை என ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. வங்கி சமர்ப்பித்த விவரங்களின்படி, ஐடி மேலாண்மை, உள்கட்டமைப்பு, கோர் பேங்கிங் தொடர்பாக விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கியின் ஆன்லைன் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 15ம் தேதியம் இத்தகைய இடையூறு நிகழ்ந்தது.
தொடர்ந்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் இந்த வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்படுகிறது. இதுபோல் புதிய கிரெடிட் கார்டு வழங்குவதும் தடை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் ஏற்கெனவே உள்ள கோடக் மகிந்திரா வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவைகள் வழங்குவது, கிரெடிட் கார்டு வழங்குவதற்குத் தடையில்லை.
கடந்த 2 ஆண்டுகளில் இந்த வங்கியில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், குறிப்பாக கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மிக அதிகமாக நடைபெற்றுள்ளன. இது ஐடி உள்கட்டமைப்புக்கு மேலும் சுமையை கூட்டுவதாக அமைந்துள்ளது எனவே, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
The post ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் கோட்டக் மகேந்திரா வங்கி பங்குகளின் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.