×

கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம் தென்னந்தட்டிக்கு கிராக்கி வீடுகள், கடைகள் முன் கட்டினால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்

திருப்புவனம், ஏப்.25: கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் மடப்புரம் தென்னந்தட்டிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தமிழத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 113 டிகிரி வரை எகிறியுள்ளது. வெயிலில் இருந்து பாதுகாக்க பயன்படும் தென்னந்தட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம், மடப்புரம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.

இப்பகுதியில் தேங்காய் உற்பத்தி தவிர தென்னை சார்ந்த உபரி தொழில்களும் நடந்து வருகின்றன. தென்னை மட்டைகளில் இருந்து தட்டிகள், விசிறிகள், தேங்காய் மட்டைகளில் இருந்து கயிறுகள் உள்ளிட்டவை குடிசை தொழிலாக தயாரிக்கப்பட்டு மதுரை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. பெண்கள் வீட்டிலேயே தட்டி பின்னுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் 50 முதல் 100 பேர் வரை தட்டி பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 தட்டிகள் வரை பின்னுகின்றனர். தென்னந்தோப்புகளில் மொத்தமாக மட்டைகளை வாங்கி வந்து கீறி தட்டிகள் பின்னுகின்றனர். ஒரு மூன்று மட்டை தட்டி 100 ரூபாயில் இருந்து தட்டுப்பாட்டை பொறுத்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விசிறி 20 ரூபாய், பெருக்கு மாரு 15 ரூபாய் என விற்பனை செய்கின்றனர். மற்ற பகுதிகளில் பின்னப்படும் தட்டிகளை விட மடப்புரம் பகுதி தட்டிகள் மிகவும் நெருக்கமாகவும், எளிதில் பிரிந்து போகாது என்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். பொதுவாக கோடை காலங்களில் வீடுகள், கடைகள் ஆகியவற்றின் முன்புறம் தென்னந்தட்டிகளை பயன்படுத்தி மேற்கூரை அமைப்பது வழக்கம். இதன் மூலம் வீட்டினுள் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறையும்.

இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக வெயிலின்தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆட்டோ, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் கூட மேற்புறம் தென்னந்தட்டிகளை வைத்து இறுக்கமாக கட்டி வலம் வருகின்றனர். தட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 தட்டிகள் வரை பின்னுவோம். வருடம் முழுவதும் வேலை இருக்கும், தற்போது சாலை ஓரங்களில் தற்காலிக கடைகள் அமைக்க தென்னந்தட்டிகள் வாங்கி செல்கின்றனர். வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க தென்னந்தட்டிகளை பயன்படுத்துவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்து தட்டிகள் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

The post கோடை வெயிலால் விற்பனை ஜோர் மடப்புரம் தென்னந்தட்டிக்கு கிராக்கி வீடுகள், கடைகள் முன் கட்டினால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் appeared first on Dinakaran.

Tags : Jor Madapuram South Nanthati ,Turupwanam ,Madapuram ,Tamil Nadu ,Vaigai ,Jor Madapuram ,South Nanthati ,Dinakaran ,
× RELATED மடப்புரம்விலக்கு கோயிலில் சங்கடஹர...