×
Saravana Stores

டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம் பற்றாக்குறை 26 வளர்ப்பு யானைகளை இடமாற்றம் செய்ய முடிவு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ஏடிஆர்) தண்ணீர் மற்றும் இயற்கை தீவனம் பற்றாக்குறையால் அங்குள்ள 26 வளர்ப்பு யானைகளை 4 வெவ்வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு மாதமாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியையும் வெயில் விட்டு வைக்கவில்லை. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும், மாவட்டத்தில் 89 சதவீதம் மழை பற்றாக்குறை காரணமாகவும் பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்சிலிப்பில் உள்ள இந்தியாவின் பழமையான யானைகள் முகாமில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாம் நீராதாரமின்றி காய்ந்து வருகிறது. இது, வனத்துறை அதிகாரிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இம்முகாமில், 26 வளர்ப்பு யானைகள், வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு, யானை பாகன் மற்றும் யானை பராமரிப்பு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. அதற்கான, கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதனால், இங்குள்ள யானைகள் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதாவது, வரகாளியாற்றில் 10 யானைகள், சின்னாரில் 6 யானைகள், மானம்பொலியில் 5 யானைகள், கோழிகமுத்தி முகாமில் இருந்து சிறிது தூரத்தில் 5 யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

தற்போது, கோடை காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவை இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அதனால், இங்குள்ள யானைகளை வேறு முகாம்களுக்கு இடமாற்றம் செய்ய, வனத்துறை உயரதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

The post டாப்சிலிப்பில் கடும் வறட்சி, தீவனம் பற்றாக்குறை 26 வளர்ப்பு யானைகளை இடமாற்றம் செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : Tapsilip ,Coimbatore ,Anaimalai Tiger Reserve ,ATR ,Pollachi ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED டாப்சிலிப்பில் இருந்து 5 யானைகள் மானாம்பள்ளி முகாமிற்கு மாற்றம்