×

போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி: சினிமா உதவி இயக்குநர் உள்பட 7 பேர் கைது

காரைக்குடி: தமிழகம் முழுவதும் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி செய்த சினிமா உதவி இயக்குநர் உட்பட 7 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 100 அடி ரோட்டில் தனியார் நகை அடகுக்கடை உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நகை அடமானம் வைக்க ஒருவர் வந்தார். நகைகளை சோதனை செய்தபோது போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து கடை நிர்வாகி வினோத், உடனே குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், திருப்புத்தூரை சேர்ந்த நாச்சியப்பன் (43) என்பதும், தற்போது சென்னையில் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் தமிழகம் முழுவதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாச்சியப்பன் கைதானார். இதையடுத்து எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசு கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, சென்னையை சேர்ந்த தமிழ்வாணன், கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார், காரைக்குடியை சேர்ந்த ராஜகோபால், ராமசாமி, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த பீனு, சுபாஷ்குமார் ஆகியோரை அதிடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 147 கிராம் போலி நகைகள் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில், ‘‘நாச்சியப்பன் சென்னையில் சினிமா உதவி இயக்குநராக உள்ளார். இக்கும்பல் காரில் சென்று தனியார் அடமான கடைகளை குறிவைத்து தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்துள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள வங்கியிலும் அடமானம் வைத்துள்ளது தெரியவருகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

The post போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் மோசடி: சினிமா உதவி இயக்குநர் உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Tamil Nadu ,Sivagangai District ,
× RELATED வாலிபரை காலால் மிதித்து கொன்ற அதிமுக...