×

ராமச்சந்திர பெருமாள் கோயிலில் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம்

பெரணமல்லூர், ஏப்.25: பெரணமல்லூர் அருகே ராமச்சந்திர பெருமாள் கோயிலில் நடைபெற்ற பிரமோற்சவ விழாவில் நேற்று தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ கொடியிறக்கப்பட்டது. பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ராமச்சந்திர பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் 22ம்தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் 9ம் நாளான நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராமச்சந்திர பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் காலை 11மணிக்குமேல் கோயில் பட்டாச்சாரியார்களால் சக்கரத்தாழ்வார் உற்சமூர்த்திகளுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தீர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்களின் பக்தி கோஷத்துடன் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மேலும் இரவு 8மணிக்குமேல் பிரமோற்வச கொடியிறக்கம் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post ராமச்சந்திர பெருமாள் கோயிலில் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் appeared first on Dinakaran.

Tags : Brahmotsavam ,Ramachandra Perumal Temple ,Peranamallur ,Nedungunam ,Theerthavari Peranamallur ,
× RELATED பட்டதாரி இளம்பெண் கடத்தல்? போலீஸ் விசாரணை வேலை தேடிச்சென்ற