புதுடெல்லி: நாட்டின் முதல் புல்லட் திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்பதை மதிப்பீடு செய்ய முடியாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நாட்டின் முதல் புல்லட் ரயிலானது மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் 508கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட உள்ளது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்த 508கி.மீ. புல்லட் ரயில் வழித்தடத்தை அமைத்து வருகின்றது.
இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது முடிவடையும் என்ற விவரத்தை வழங்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வேக்கு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் கோரியிருந்தார். இதற்கு தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அளித்துள்ள பதிலில், ‘‘மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில் திட்ட பணிகளுக்கான அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டு முடிந்த பின் தான் திட்டம் எப்போது நிறைவடையும் என்பது குறித்து மதிப்பீடு செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட புல்லட் ரயில்வே திட்டம் டிசம்பர் 2023ம் ஆண்டு முடிவடையும் என மதிப்பிடப்பட்டது. எனினும் கொரோனா மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றால் இது தாமதமானது. சூரத் மற்றும் பிலிமோரா இடையே முதல் கட்டமாக 50கி.மீ. நீளமுள்ள முதல் கட்ட பணிகள் 2026ம் ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் முடிவடையும் என்று ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The post புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது முடியும் என்று தெரியாது: ஆர்டிஐ கேள்விக்கு ரயில்வே பதில் appeared first on Dinakaran.