குலசேகரம்:கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த மலைகிராமமான ஆண்டிபொத்தை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (28). விவசாயியான இவர் குலசேகரம் அருகே சேக்கல் பகுதியில் உள்ள தனது அன்னாசி பழ தோட்டத்துக்கு நேற்று காலை சுமார் 6 மணியளவில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, குலசேகரம் அருகே காக்கச்சல்- தேனங்கோடு பகுதியில் வந்தபோது மலையில் இருந்து திடீரென பைக்கின் குறுக்கே புலி பாய்ந்து அங்கிருந்த ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்தது. புலியை பார்த்த அதிர்ச்சியில் ஜெகன் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருநந்திக்கரை திட்டவிளை பகுதியை சேர்ந்த பூதலிங்கம் (61) என்பவர் மீது அங்கு வந்த புலி பாய்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் புலியின் பிடியில் இருந்து தப்பிக்க போராடினார். ஆனால், பூதலிங்கத்தின் முகம், வயிறு, கை, கால் என புலி நகத்தால் கீறியது. உடலின் சில பகுதிகளில் கடித்து குதறியது. இதையடுத்து பூதலிங்கம் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்தனர். இதனால் புலி அங்கிருந்து சென்று அருகில் இருந்த பள்ளத்தில் சுண்டு விழுந்து மயங்கியது.
படுகாயம் அடைந்த பூதலிங்கம் சிகிச்சைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் பைக்கில் இருந்து விழுந்து படுகாயமடைந்த ஜெகனும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அந்த புலி அசைவற்று கிடந்தால் பொதுமக்கள், போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் புலியை பரிசோதனை செய்த போது அந்த புலி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
புலியின் உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயம் இருந்தது. மேலும் புலியின் கழுத்து பகுதியில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்திய நிலையில் இருந்தன. எனவே இந்த புலி ஜெகன், பூதலிங்கத்தை தாக்குவதற்கு முன்பாக வனப்பகுதியில் முள்ளம்பன்றியை வேட்டையாடி உண்டு இருக்கலாம். அப்போது புலியின் வயிற்றுக்குள் சென்ற முள்ளம்பன்றியின் முட்கள் புலியை குத்தி கிழித்து ஏற்படுத்திய காயத்தால் இறந்து இருக்கலாம் என்று முண்டந்துறை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
The post தொழிலாளியை கடித்து குதறிய புலி திடீர் சாவு appeared first on Dinakaran.